நம்மை நாம் நல்வழிப்படுத்திக் கொள்ள 18 படித்தளங்கள்
|
|
- எதையும் சுயமதிப்பீடு செய்யும் பக்குவம் வளர நல்ல குருவைத் தேடி, அவரின் வாயிலாக நல்ல கருத்துக்களை அறிந்து பிறகு உணர்ந்து பாருங்கள்.
- ஐம்புலன்கள் வழியில் சென்றால் மாயை நரகத்தில் தள்ளிவிட்டு உங்களை வேடிக்கை பார்க்கும். ஆனால் உணர்வுப் பாதையில் செல்பவர் இறைவனின் பாதக்கமலத்தில் இருப்பார்.
- உங்கள் மனம் அவ்வப்போது பாதைமாறி தவறான வழியில் இழுத்துச் செல்லும்போது குருவின் துணையாலும், சற்குருவின் அருளாலும் உள் உணர்வு உங்களை நல்வழியில் திருப்பிச் செல்லும்.
- இன்ப துன்பம் கவலை வரும் நேரத்தில், உங்கள் மனதை இழுத்து இறைவன் பக்கம் திருப்பி சற்குரு மந்திரத்தைக் கூறி பயிற்சி செய்து பாருங்கள். ஆனந்தம் கிடைக்கும்.
- பிறகு பிறர் குறையைப் பார்த்து உணர்ந்து, தன் குறையைக் கண்டு திருத்தி தன்னை நல்லவராக்கிக் கொள்வீர்கள்.
- தியானப் பயிற்சி கூடக்கூட, சுய விசாரணை செய்யச் செய்ய ஞான வழிப்பாதையின் மிகப் பெரிய முதல் இரும்புக் கதவை இறைவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திறப்பார்.
- இந்த நேரத்தில் மாயை மும்மலங்களை உங்களுக்குள் விசுவரூபமெடுக்கச் செய்யும். சற்குரு மந்திரத்தாலும் குருவின் அறிவுரைகளை நினைத்துப் பார்ப்பதாலும் மீண்டும் வெற்றிப்பாதையில் முன்னேறுவீர்கள்.
- இரண்டு பக்கமும், அடிக்கடி உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று உலக வாழ்க்கை, மற்றொன்று ஞானவாழ்க்கை.
- வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பது மட்டும் அல்ல. அத்துடன் ஞான குருவின் உதவியால் இறைவனைக் கண்டு உணர்வது. பூமியில் சற்குருவே இறைவன் என்று நம்புவது.
- பலரை வெற்றி பெற்றவர்கள், என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்கள் பலமுறை தோல்வியைக் கண்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- மற்றவர்கள் புகழ்வதற்காக ஒன்றைச் செய்வதைக் காட்டிலும், பிறர் உயர்வு பெற பணி செய்பவர் இறைவனின் அன்புக்குரியவர். இவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.
- உங்களை உண்மையாக நேசிப்பவர்களின் நலன் கருதுவது. இறைவனுக்கு தொண்டு செய்வதற்கு சமமாகும்.
- இறந்த காலத்தின் தவறை நினைத்துப் பார்ப்பது இன்று நாம் திருந்தத்தான். ஆனால் அதை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதற்காக இல்லை.
- உங்கள் முன்னேற்றத்திற்கு பிறர் தடையாக இருப்பதாக குறை கூறாதீர்கள். முதலில் உங்களை உற்றுநோக்குங்கள். பிறகு உண்மைத் தொண்டராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒருநாள் உண்மையைக் கண்டடைவீர்கள்.
- தொடர்ந்த உழைப்பும், இறை நினைப்பும், மந்திரமும், தியானமும் உங்களை உயர்ந்த மனிதராக்கும்.
- இதனால் இறை விசுவாசமும், குரு நன்றியும் மனதில் மலரும்.
- உடனே உண்மை உங்களிடம் மேலோங்கும். அப்பொழுது பரிசுத்தம் ஆவீர்கள். மனமும் அறிவும் ஒன்று சேரும்.
- ஞானகுருமார்கள் உங்களை நேசித்து ஆசிர்வதிப்பார்கள், உங்களிடம் இறைவன் குடி கொள்வார். எதிலும் மயக்கம் இருக்காது. பௌர்ணமி போன்று என்றும் முழுமையாகப் பிரகாசிப்பீர்கள்.
|
|
| மகாகுரு |
|
|